காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸில் பொருளாளராக இருப்பவர் ரூபி மனோகரன். இவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, நெல்லை மாவட்டத் தலைவரை மாற்ற வேண்டுமென ரூபி மனோகரன் ஆதரவு நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அது மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து 3 பேர் காயமடைந்தனர். இதற்கு ரூபி மனோகரன்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு, அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் 15 ஆம் தேதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, “ரூபி மனோகரன் 15 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார். ஆனால் அது ஏற்றதாக இல்லை என முடிவு செய்துள்ளோம். ரூபி மனோகரன் விளக்கம் தெரிவிக்கும் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கி வைக்கிறோம்” என்று அறிவித்தார். இதுதொடர்பான கடிதமும் ரூபி மனோகரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.







