ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சிஇஓ திடீர் ராஜினாமா..!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான S.கிருஷ்ணன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் நண்பருடன் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர்…

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான S.கிருஷ்ணன் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் நண்பருடன் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

முதற்கட்டமாக ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை எண்ணவே முடியாமல் எவ்வளவு பணம் வந்துள்ளது என குழம்பி இருந்தார். அதன் பின் தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருக்கும் நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார். இதனையடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ.21,000 பணம் அனுப்பிய பிறகு, 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை உறுதி செய்து அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாரை தொலைபேசி மூலம் அழைத்து 9000 கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதிலிருந்து பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து நிர்வாகம் தரப்பில் ராஜ்குமாரை திடீரென மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளை தரப்பில் இருந்தும், டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இறுதியாக 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார். வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான S.கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கிருஷ்ணன் பதவி விலகுவதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலுக்கு அவரது ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.