சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.14,545.91 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு தகவல்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்காக 14,545.91 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் வலையமைப்பை விரிவுபடுத்துவதால் நகர்ப்புறப் போக்குவரத்து, போக்குவரத்து நெரிசல் குறைதல் மற்றும் இறுதிக்கட்ட இணைப்பு மேம்படுதல் ஆகியவற்றில் எதிர்பார்க்கப்படும் தாக்கம் என்ன? என மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை இணை அமைச்சர் தோஹன் சாஹு,

“சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம், மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு, மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

வழித்தடம் 3 – மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி.மீ.)

வழித்தடம் 4 – கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ.) மற்றும்

வழித்தடம் 5 – மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47.0 கி.மீ.).

இத்திட்டத்திற்கு மத்திய அரசு 63,246 கோடி செலவில் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை செயல்படுத்தும் முகமையான சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், இத்திட்டத்தின் தற்போதைய கட்டுமானப் பணிகள் 54.62% அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோவிற்கான மத்திய நிதி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கோரும் நிதித் தேவையின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக 14,545.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கமானது, சென்னை பெருநகரப் பகுதி முழுவதும் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்து இணைப்பை வழங்குவதன் மூலம் நகர்ப்புறப் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தும் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தெரிவித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் தடமானது பேருந்து நிலையங்கள், விமான நிலையம் மற்றும் பிற மெட்ரோ வழித்தடங்களுடன் ஒருங்கிணைப்பது போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.