காத்துவாக்குல தமிழ் படங்களை காப்பாத்தும் அனிருத்!

எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மானை தொடர்ந்து தமிழ் படங்களை காப்பாற்றும் உன்னதப் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார் இசை ரவுடி அனிருத். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’…

எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மானை தொடர்ந்து தமிழ் படங்களை காப்பாற்றும் உன்னதப் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார் இசை ரவுடி அனிருத். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ‘படம் சுமார், ஒரு தடவ பக்கலாம், ஓகே, மொக்கை, சூர மொக்கை, சமந்தாவ தவிர படத்துல ஒன்னுமே நல்லால்ல!’. இவைகள் தான் படம் தொடர்பாக பரவலாக வந்த விமர்சனங்கள்!

இவற்றையெல்லாம் தாண்டி தியேட்டரில் ஆரவாரத்துடன் விசில்கள் பறக்கிறது. ஆண்களும் பெண்களும் திரைக்கு அருகே சென்று ‘டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ’ என்று ரகளையாக நடனம் ஆடுகிறார்கள். வெளியான பெரும்பாலான திரையரங்குகளில் இளைஞர்களின் கூட்டம் அள்ளுகிறது. விமர்சனங்களை தாண்டி வசூல் ரீதியாக படம் ‘ஹிட்’ அடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. அனிருத் எனும் ‘இசை ரவுடி’ நிகழ்த்திக்காட்டிய சாகசம் இது. ‘அவரோடு மியூஸிக்காக தான் வந்தோம் We are happy annachi’ என்று பலரும் பாராட்டுவதை பார்க்க முடிகிறது. ‘டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்.. டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பம்’ என்று நமது நரம்புகளை கிட்டார் ஸ்ட்டிரிங் போல் ‘வைப்பரேட்’ செய்வதாகட்டும், ‘நான் மழை..நீ மழலை’ என்று இசையால் கொஞ்சி குழவி நம் மனதிற்குள்( Technicaly நமது இதயத்திற்குள்) காதல் குலுக்கோஸை ‘இன்ஜெக்ட்’ செய்வதாகட்டும்… ‘அனி’ இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்!

சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தை பரோட்டா கல்லிலும், எண்ணெய் கடாய்களில் போட்டு துவைத்து வறுத்தெடுத்த விமர்சகர்கள் கூட படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் தான் உங்களுக்கு ஆறுதல் பரிசு என பாராட்டு பத்திரம் வாசித்தார்கள். END card போட்ட பிறகும் காத்திருந்து ‘ஜாலியோ ஜிம்கானா’வென ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு சென்றதையும் நம்மால் பார்க்க முடிந்தது.

80களில் மிக சுமாரான அல்லது மொக்கையான படங்களைக்கூட தன்னுடைய இசை மேஜிக்கால் வெற்றி படங்களின் பட்டியலில் சேர்த்துவிடுவார் இளையராஜா. தற்காலத்தில் அதேபோல் ஒரு மேஜிக் ஸ்டிக்கை (கீபோர்டை) கையில் எடுத்திருக்கிறார் இசை ரவுடி அனிருத். ‘நீங்க சும்மா நடந்து வாங்க சார் மீதிய நான் பாத்துக்குறேன்’ என்று ரஜினியின் பேட்டை படத்தில் பறையை பற்றவைத்து அடித்து நொறுக்கியதாகட்டும், ‘நீங்க அப்படியே GUN-ஐயெல்லாம் ஒளிச்சி வச்சிட்டு.. இலைய போட்டு உக்காருங்க சார்..மீதிய அடியேன் பாத்துக்குறேன்’ என்று கமலின் விக்ரம் Teaser-லயே நமக்கு தரமான ட்ரீட் கொடுத்ததாகட்டும்.. கத்தியின்றி ரத்தமின்றி கடந்த 10 ஆண்டுகளாக இந்த ‘இசை ரவுடி’ செய்த அனைத்து சாகசங்களுமே இணையத்தின் சென்சேஷன் தான்.

 

அதுமட்டுமா..? விஜய் – அஜித் ரசிகர்களின் ரசிகப்போர் பற்றி உலகமே அறியும். அந்த விக்ரம் – வேதாக்களை தன்னுடைய இசையால் ஒன்றிணைத்ததற்காகவே வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதை அனிருத்துக்கு கொடுக்கலாம். yes, அஜித்தின் வலிமை படம் வெளியாகும்போது முதல் நாள் ‘செலிபிரேஷனில்’ அரபிக் குத்து போட்டு ஆடித் தீர்த்தனர் அஜித் ரசிகர்கள். அதேபோல், பீஸ்ட் படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தின் போதும், ‘ஆலுமா டோலுமா’-வை போட்டு அதகளம் செய்தார்கள் விஜய் ரசிகர்கள்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு காமெடி படத்திற்கு தன்னுடைய Background இசையால் கிளாஸிக்கல் வண்ணத்தை பூசியிருப்பார். இந்த படத்தின் தீம் மியூஸிக், குலவை சத்தம் போல ஒரு அலறலோடு தொடங்கி ‘ஏய்முஹி மேமஹிமாய்ய்..எழுமுஹி மேய்மஹிமாய்ய் (எனக்கு அப்படித்தான் கேட்டது.) என பெரும் ஓலத்தோடு தொடரும். அதில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளாரான ‘எனியோ மோரிகோனே’வின் ‘டச்’ இருக்கும். கீழே உள்ள வீடியோவின் தொடக்கத்தில் இருந்து கேட்கலாம்.

‘The good, the bad, and the ugly’ எனும் காலத்தால் அழிக்கமுடியாத Western திரைப்படத்திற்கு ‘எனியோ’ தீட்டிய ‘தீம்’ இசை உலக பிரசித்தி பெற்றது. இன்று வரை உலகம் முழுக்க பல்வேறு திரைப்படங்களில் அந்த தீம் மியூஸிக்கின் தாக்கம் இருக்கும். அதில் ‘wah-wah-wah’(கீழே இணைக்கப்பட்ட வீடியோவில் 1:20 முதல்) என்று வரும் ‘ஓலம்’சாகசத்திற்கான, விடுதலைக்கான உணர்வுகளை வெளிப்படுத்தும் அதே வேளையில் நகைச்சுவையான ஒரு குறும்பு தனத்தையும் கொண்டிருக்கும்.

கலைஞர்களுக்குள் கலைத்தன்மையை தாண்டி, கட்டுப்பாடுகள் அற்ற ஒரு குறும்புத்தனமும் சல்லித்தனமும் இருக்க வேண்டும். பொதுவாக சல்லித்தனம் என்பது ஒருவரை சிறுமைபடுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கலையில் அந்த சிறுமைத்தனம் அல்லது சிறுபிள்ளை தனமே ஒரு புது அழகியலை கொடுக்கும். அது ஆடியன்ஸை அவர்களுக்கு தெரியாமலே ஒரு புத்துணர்ச்சியான குதூகலமான மனநிலைக்கு கொண்டு சென்றுவிடும். 80களில் வந்த இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களில் இதுபோல குறும்புத்தனங்கள் பல இருக்கும். அவரின்‘ஏன் ஜோடி மஞ்சக் குருவி’யின் பாடலின் முன்பு வரும். ‘பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா ஹஸ்போடோமி மஸ்படோமியா’ சின்ன உதாரணம்.

இந்த குறும்புத்தனம் அனிருத்தின் பெரும்பாலான பாடல்களிலும், பின்னணி இசைகளிலும் சர்வ சாதாரணமாக வெளிப்படும். அந்த மேஜிக் தான் இளைஞர்களை கட்டி போடுகிறது. அதுதான் அரபிக் குத்து என்று புது ‘flavour’-இல்  விளையாட வைக்கிறது. அது தான்‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ எனும் ஆடியன்ஸின் குரலை தன் இசையில் பயன்படுத்த தூண்டுகிறது. அந்த குறும்புத்தனம் தான் ‘Bad vibe-u ஜல்தி ஜாயேகா ஜாயேகா… peace தான் ப்ரோ tension ஜாயேக..’ என்று ஜாலியாக நம்மை vibe செய்து ஆடவைக்கிறது.

ஒரு சிறந்த கலைஞனாக அனிருத் கொண்டாடப்படுவதற்கான இன்னொரு முக்கிய காரணம், மற்ற இசைக் கலைஞர்களோடு ‘Collab'(இணைந்து) செய்து இசைப் பணியாற்றுவது. 90களில் நம்முடைய நாடி நரம்புகளை பதம் பார்த்த தேவா-ஐ அழைத்து தன்னுடைய பாடல்களில் பாட வைப்பார். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், இமான் என தன்னுடைய சமகால கலைஞர்களின் இசையில் பாடிக்கொடுப்பது, தன்னுடைய இசையில் மற்ற இசையமைப்பாளர்களை பாட வைப்பது என்று விதவிதமாக ரசிகர்களுக்கு ட்ரீட் வைப்பார். அதுமட்டுமல்லாமல் தான் இசையமைக்கும் படங்களில் எந்த ‘ஈகோ’வும் இல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையை ரீகிரியேட் செய்து ஆடியன்ஸுக்கு புது ‘ட்ரீட்’ கொடுப்பார். பேட்டை மற்றும் தர்பார் படத்தில் ரஜினிக்கு தேவாவின் தீம் மியுஸிக் , மாஸ்டரில் விஜய்க்கு வித்யாசாகரின் கில்லி BGM என ரகளையாக கலந்தடிப்பார் அனிருத்.

என்னதான் இருந்தாலும், அனிருத்தை இளையராஜாவோடு ஒப்பிடலமா என்று கூட சிலருக்கு கோபம் வரலாம்( இந்த கட்டுரையை படித்த உடன் பணியாற்றும் நண்பர்கள் சிலர் கூட ஷாக்கானார்கள்!). யாரை யாருடன் வேண்டுமானாலும் ஒப்பிடலாம் என்பதே ஒரு கலைஞனாக இளையராஜா நமக்கு கற்று தந்த பாடங்களில் ஒன்று என்பதைக்கூட ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் இசையையோ, இசைக் கலைஞர்களையோ ஒப்பற்ற தெய்வீக தன்மைக்கு தூக்கிவிடும் முயற்சியில் அவர்களை நம்மில் இருந்தும் தள்ளி வைத்து விடுகிறோம் என்பதே அடியேனின் கருத்து.

இளையராஜாவை பற்றிய ஒவ்வொரு வீடியோக்களிலும், கட்டுரைகளிலும் பெரும்பாலும் அவரின் மெலோடிகளையும், சோக கீதங்களையுமே போற்றிப் பாடுகிறோம். ஆனால் 80-களின் இளையராஜாவிடம் சென்றால்.. ஏய் உன்னைத்தானே!, இளமை இதோ இதோ… ஆசை நூறு வகை, ஆடி மாசம் காத்தடிக்க, அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ என்று அனிருத் போலவேதான் நம்மை ரகளையாக உலுக்கியெடுப்பார். இளையராஜாவின் இசையை கொண்டாடும் அதே சமூகம் தான் அனிருத் இசையையும் கொண்டாடி வருகிறது. இளையராஜா அந்த கால இசை ரவுடியாக இருந்தது போல் அனிருத் வருங்கால இசைஞானியாகாவிட்டாலும், இசை விஞ்ஞானியாக வருவார் என்று கூறிக்கொண்டு..!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.