கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்டது ஏன்?- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.  கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் நீர்வளத்துறை சார்பில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம்…

அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். 

கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் நீர்வளத்துறை சார்பில் கீழ்பவானி பாசன
விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, சாமிநாதன் ஆகியோரும் ,
கீழபவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும்
கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது  குறித்து சிறிது நேரம் முன்புதான் தமக்கு தெரியும் என்றார். .சிகிச்சைபெற வீட்டிலிருப்பதைவிட மருத்துவமனைக்கு செல்வது சிறந்ததாக இருக்கும் என்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என கூறிய அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி  ஏற்கனவே செலுத்திக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மு.க.ஸ்டாலின் விரைவில் உடல்நலம் பெறுவார் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.  கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடையே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகக் கூறிய அவர், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையின்போது  இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக துணைப்பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்டது தொடர்பாக பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,  கே.பி.முனுசாமியின் குவாரிக்கு ஏற்கனவே அரசு சீல் வைத்ததை சுட்டிக்காட்டினார். புதியதாக 20 குவாரிகள் டெண்டர் விட்டதில் அதிகபட்ச தொகை செலுத்தி கே.பி.முனுசாமி குவாரி எடுத்திருப்பதாகக் கூறிய அமைச்சர் துரைமுருகன், குவாரி உரிமம் வழங்கப்பட்டதில் எந்த விதிமீறலும் நிகழவில்லை என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுவதாக கூறப்படும் விமர்சனங்களில் சிறிதும் உண்மை இல்லை எனக் கூறிய துரைமுருகன்,  அரசியலில் இது போன்று குற்றம்சாட்டுவது வழக்கம்தான் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.