திரை விமர்சனம்: திருச்சிற்றம்பலம் எப்படி உள்ளது?

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

கர்ணன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு திருச்சிற்றம்பலம் மீண்டும் திரையரங்கில் வெளியாவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தனுஷ், மித்ரன் ஜவஹர் கூட்டணியில் ஏற்கனவே வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நான்காவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. திருச்சிற்றம்பலம் என்னும் கதாப்பாத்திரத்தில் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார்.

காவல்துறை அதிகாரியான தனது தந்தை பிரகாஷ் ராஜ் செய்யும் ஒரு சிறு தவறு காரணமாக தனது தாய் மற்றும் தங்கையை தனுஷ் இழந்து விடுகிறார். இதனால் பல ஆண்டுகளாக தனது தந்தையிடம் பேசாமல் இருக்கும் தனுஷ் தாத்தா பாரதிராஜா அரவணைப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். தாயின் இழப்பால் பயந்த சுபாவமாக மாறும் தனுஷ்க்கு சிறு வயது முதல் தோழியாக இருக்கும் நித்யா மேனன் எல்லா நேரங்களில் உறுதுணையாக உள்ளார். உணவு டெலிவரி செய்யும் வேலை செய்யும் தனுஷ் தனது பள்ளி தோழியுடன் காதல் வயப்படுகிறார். ஆனால் அந்த காதல் கைக்கூடவில்லை.

காதல் தோல்வியால் விரக்தியில் இருக்கும் தனுஷ்க்கும் தந்தை பிரகாஷ் ராஜ்க்கும் சண்டை ஏற்பட இதனால் பிரகாஷ் ராஜுக்கு உடல் நல குறைவு ஏற்படும். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை தனுஷ் எப்படி பார்த்து கொள்கிறார். ஆசைப்பட்ட பெண்ணை தனுஷ் திருமணம் செய்தாரா இல்லையா என்பதே திருச்சிற்றம்பலம் படத்தின் கதை.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய தனுஷை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. அதே நகைச்சுவை, அதே எனர்ஜி என தன்னால் முடிந்த எல்லா இடங்களிலும் நம்மை பிரம்மிக்க வைக்கிறார். பாரதிராஜா உடன் இணைந்து தனுஷ் செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அதே நேரத்தில் தந்தைக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் அவர் செய்யும் சில விஷயங்கள் உணர்ச்சி பொங்க வைக்கிறது.


இயக்குனர் பாரதிராஜா தான் ஒரு மிகப்பெரிய நடிகன் என்பதை மீண்டும் இந்த படத்தில் நமக்கு புரியவைத்துள்ளார். நகைச்சுவை, எமோஷ்னல் என அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். அந்த காலத்து காதல் முதல் இந்த காலத்து காதல் வரை பாரதிராஜா விளக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

காவல்துறை அதிகாரியாகவும் தனுஷின் தந்தையாகவும் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகன் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் தந்தையாக தன்னுடைய கடமையை அவர் செய்யும் விதம் சிறப்பாக உள்ளது. குறிப்பாக தந்தை மகனுக்கான காட்சிகளை இயக்குனர் மித்ரன் சரியாக காட்சிப்படுத்தியுள்ளார். அனிருத் இசையமைக்கும் திரைப்படங்கள் வெற்றிப்பெற்று விடும் என்பதை மீண்டும் இந்த படத்தின் மூலம் அவர் நிரூபித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பின்னனி இசையும் ரசிக்க வைக்கிறது.

தனுஷின் தோழியாக நடித்துள்ள நித்யா மேனன் தொடக்கம் முதல் இறுதிவரை படத்தின் பலமாக உள்ளார். தோள் கொடுக்கும் தோழியாக, அரவணைக்கும் ஒரு குடும்ப உறுப்பினராக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

தந்தை – மகன் உறவு, குடும்ப உறவு முறைகள் என இயக்குனர் மித்ரன் தான் சொல்ல நினைத்த கதையை சிறப்பாக கையாண்டுள்ளார். ஒரு சில காட்சிகளில் உணர்ச்சிகள் பொங்கினாலும் பல இடங்களில் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர். ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் பல கோடிகளில் செட் அமைத்து அதை மீண்டும் உடைக்கும் காட்சிகள் என எதுவுமே இந்த படத்தில் இல்லை என்பது படத்திற்கு கூடுதல் பலம். ஒட்டு மொத்தமாக குடும்பத்துடன் திரையரங்கில் ரசித்து பார்க்கும் ஒரு ஃபீல் குட் மூவி என்றே திருச்சிற்றம்பலம் படத்தை சொல்லலாம்.

– தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.