“வளமிகு தமிழ்நாடு யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல” – #EPS கண்டனம்

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக பகுதிகளில்…

"Resourceful Tamil Nadu is nobody's dustbin" - #EPS Condemnation

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் கொட்டப்படுவது தொடர் கதையாகி இருந்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டன. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது,

“கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம். கேரள முதலமைச்சருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தவறியதுடன், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்காமலும் இருக்கிறார்.

வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல! கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.