சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஈசிஆர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் திடீரென ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டபட்டுள்ளதாக தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை
உயர்நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
கடந்த 10 மற்றும் 11ம் தேதி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வருவாய்த்துறை செயலாளரை சந்தித்தனர்.அப்போது அவர்கள் அளித்த உறுதியின் பேரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்தவர்கள் போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது விரைவில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள் என்று வருவாய்த்துறை உத்தரவு இட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூர் வட்டாச்சியர் மணிசேகர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்ற வந்தனர்.
மக்கள் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்தெல்நகர் பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பெத்தேல்நகர் பகுதியில் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 30 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு அரசு சார்பில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, சாலை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சலுகையும் அரசு செய்துவிட்டு தற்பொழுது இந்த இடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறினால் நாங்கள் எங்கு செல்வது என்ற கேள்வியை அதிகாரிகளிடமும் முன் வைக்த்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
குடியரசு தினமான இன்று அரசு விடுமுறை நாளிலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் பகுதிக்கு வந்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பான
சூழல் காணப்பட்டு வந்தது.
கிண்டி கோட்டாட்சியர், சோழிங்கநல்லூர் தாசில்தார் ஆகியோர் கொண்ட குழு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது.
போராட்டம் மீண்டும் தொடர்ந்ததால் முதலில் அந்த பகுதியில் உள்ள கடைகளில் மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து வருகின்றனர்.இது வரை 50 க்கும் மேற்பட்ட கடைகளில் மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்சாரம் துண்டித்துள்ளதாக
தெரிவித்தனர்.
இந்த நிலையில் பெத்தெல் நகர் பகுதியில் போராட்டத்தில் இடுபட்டு வந்த மக்கள் தீடிரென இ.சி.ஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடுப்பு கம்பிகளை வைத்து தடுக்க முற்பட்டும் மீறி சாலையில் அமர்ந்து பெண்கள், இளைஞர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் அனைவரையும் வெளியேற்றினர். கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.








