‘இட ஒதுக்கீட்டுப் போராளி’ வி.பி.சிங் பிறந்த தினம் இன்று..!

இந்தியாவில் மாபெரும் அரசியல் சக்தியாகத் தி‌கழ்ந்தவர்…. சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்தவர்… தனது பிரதமர் பதவியையே விலையாக கொடுத்து பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர்… அதற்காக இட ஒதுக்கீட்டுப் போராளி என…

இந்தியாவில் மாபெரும் அரசியல் சக்தியாகத் தி‌கழ்ந்தவர்…. சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்தவர்… தனது பிரதமர் பதவியையே விலையாக கொடுத்து பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர்… அதற்காக இட ஒதுக்கீட்டுப் போராளி என கொண்டாடப்பட்டவர்…. காங்கிரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டவர் என பல சிறப்புகளையும், பெருமைகளும் கொண்டவர்தான் வி.பி.சிங் இன்று இவரின் 91 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியலில் தனித்தன்மை கொண்ட ஆளுமைகளுள் ஒருவரான வி.பி.சிங் 1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25- ஆம் தேதி அலகாபாத் நகரில் செல்வாக்கு மிக்க ஒரு அரச குடும்பத்தில் ராம்கோபால் சிங் – ராதாகுமாரி தம்பதியருக்கு 2வது மகனாக பிறந்தவர். இவருக்கு சந்திரசேகர் பிரதாப் சிங் என்ற மூத்த சகோதரரும் உண்டு. வி.பி. சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்கை 5 வயது இருக்கும் பொழுது , மண்டா நகரின் அப்போதைய மன்னரான ராஜ்பகதூர் தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். படிப்பில் படு கெட்டிக்காரரான வி.பி.சிங் டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பைத் தொடங்கி, பின்னர் அலகாபாத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து முடித்தார்.

இதனையடுத்து தனது மேற்படிப்பை தொடர்ந்தவர், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி இளநிலை படிப்பில் பட்டம் பெற்றார். அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி. பி. சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். படிப்பை முடித்த அதே சமயம் அரசியலிலும் ஆர்வம் கொண்ட வி.பி.சிங், தீவிர அரசியல் களத்தில் இறங்கினார். 1969 ஆம் ஆண்டு ஆண்டு உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். இதன் பின்னர் 1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையின் கீழ் துணை வர்த்தக அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த வி.பி.சிங் பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அம்மாநில முதலமைச்சரானார். அப்போது, கொள்ளையர்களின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், 2 ஆண்டுகளிலேயே அப்பதவியிலிருந்து விலகிய வி.பி.சிங் முதல்வராகப் பொறுப்பேற்றபோது ‘கறைபடியாத கரங்கள்’ என்று எடுத்த நற்பெயர் எடுத்தார். அது அவரது அரசியலின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.

இந்திரா காந்தியின் ஆட்சியில் வர்க்கத் துறையின் துணை அமைச்சராகவும், இணை அமைச்சராகவும் பதவி வகித்த வி.பி.சிங், 1984-ல் ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றபோது நிதியமைச்சரானார். காங்கிரஸ் தலைமை அவருக்கு உயரிய பதவிகளை கொடுத்தாலும், விசுவாசம் காட்டுகிறவராக இல்லாமல் தனது மனசாட்சியின்படியே பணியாற்றியவர். நிதியமைச்சராகப் பதவிவகித்தபோது வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தொழிலதிபர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுத்தார். அதனால், வரி ஏய்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபர்களின் கோபத்துக்கும், அவர்களோடு நெருக்கம்காட்டிய கட்சித் தலைமையின் கோபத்துக்கும் ஆளானார். அதன் காரணமாக, நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு , பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சராக்கப்பட்டார்.

அதுவே ராஜீவ் காந்தி மீதான ஊழல் குற்றச்சாட்டை வெளிக்கொண்டுவர காரணமாக அமைந்தது. போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறித்து எதிர்க்கேள்வி எழுப்பியதற்காக, வி.பி.சிங் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதுவே அவரது அரசியல் வாழ்வின் திருப்புமுனையாகவும் மாறியது. பின்னர், ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். அதன் மூலம் ஜனதா கட்சி, லோக் தளம், இந்திய தேசிய காங்கிரஸ் (ஜெகஜீவன்) உள்ளிட்ட கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற பெயரில் பெரும் கட்சியாக மாற்றினார். அதற்கு வி. பி. சிங்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கினார். அதற்கு என்.டி.ராமா ராவ் தலைவராகவும், வி. பி. சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.

அந்த சமயம் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற முடியாவிட்டாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், பாஜகவும் வெளியிலிருந்து ஆதரவு அளிக்க, மத்தியில் காங்கிரஸ் அல்லாத 2வது அரசிற்கு தலைமையேற்றார். 1989ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாட்டின் 7வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 343 நாட்கள் பிரதமராக பதவி வகித்த வி.பி.சிங் மண்டல் குழுவின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். 10 ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றியதற்காக வி.பி.சிங் தமது பிரதமர் பதவியையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், செயற்கரிய செயலைச் செய்துமுடித்த மனநிறைவோடு பதவி விலகினார் வி.பி.சிங். பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர் மீது கற்களை எரிந்து பல்வேறு தாக்குதல்கள்கள் நடைபெற்றன.

இருந்து மனம் தளராத வி.பி.சிங் நான் உங்கள் முன்னால், ரத்தமும் சதையுமாக நின்றுகொண்டிருக்கிறேன். என் முன்னால் வந்து உங்கள் விருப்பப்படி தாக்குங்கள். எது எப்படி இருந்தாலும் என்னுடைய சமூக நீதிக் கொள்கையில் இருந்து நான் எப்போதும் பின்வாங்க மாட்டேன். அதில் நான் உறுதியாகவே நிற்பேன் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு 1990ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னைக்கு வருகிறார் வி.பி.சிங். தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில், கலைஞர். புதுப்பிக்கப்பட்ட மீனம்பாக்கம் விமான நிலையத்தின் திறப்பு விழா. விழாவில் அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி பேசும்போது, பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை அதனை ஏற்று பிரதமர் வி.பி.சிங்கும் ‘அண்ணா பன்னாட்டு முனையம்’, ‘காமராஜர் உள்நாட்டு முனையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுவதாக அந்த மேடையிலேயே அறிவித்ததுடன், “கலைஞர் அவர்களே.. இனி உங்கள் மாநிலத்தின் கோரிக்கைக்காக நீங்கள் டெல்லி வரைக்கும் வரவேண்டியதில்லை. சென்னையிலிருந்தே போன் செய்யுங்கள். நிறைவேற்றுகிறோம்” என்று கூறினாராம்.

அதேபோல் தமிழக வேளாண் நிலங்களின் தாகம் தணிக்க, காவிரி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியவரும் வி.பி.சிங்தான். இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த இந்திய அமைதி காப்பு படையைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதனைத் திரும்பி வரச் செய்தவரும் அவரே. தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்கள்-சமூக நீதி அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, இந்தியா முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தவரும் வி.பி.சிங்கே. நாடாளுமன்றத்தில் பெரியார் பெயரை உச்சரித்த பெருமைமிகு பிரதமர் அவர்.

“மாநிலங்கள் தங்களுக்கான சட்டங்களை இயற்றுவதிலோ அவற்றை செயல்படுத்துவதிலோ எந்த விதத்திலும் மத்திய அரசை சார்ந்திருக்கவோ கட்டுபபட்டிருக்கவோ வேண்டியதில்லை. இதில் மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றுக்கொன்று இணையான அதிகாரங்கள் கொண்டவை” என அரசியலமைப்புச் சட்டத்தினை சுட்டிக்காட்டி, மத்திய-மாநில உறவுகள் குறித்து டெல்லியில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தியவர் வி.பி.சிங்.

17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வி.பி.சிங்கிற்கு, சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது. ஏற்றுக்கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்த வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 2008ம் ஆண்டு நவம்பர் 27 அன்று மறைந்தார். 91-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் அவர் இம்மண்ணை விட்டு மறைந்திருந்தாலும், அவரது நேர்மையான அரசியல் பார்வையால் எப்போதும் நினைவூட்டப்பபட்டுக் கொண்டேதான் இருப்பார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.