பழுதான இருசக்கர வாகனத்தை சரி செய்யாததால், புதிய இருசக்கர வாகனம், ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்திற்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், சிக்கவெளி சித்தரையூர் தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன்.
இவர் கடந்த 2020 அக்டோபர் 22 ஆம் தேதி ரூ. 85 ஆயிரம் கொடுத்து, திருவாரூர்
பைப்பாஸ் சாலையில் உள்ள மூன் மோட்டாஸ் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் இருசக்கர வானம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வாகனத்தை வாங்கியது முதல் இன்ஜினில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் கூறியுள்ளார். அங்கு சரி செய்து
தருவதாகக் கூறி, உரிய முறையில் பழுது நீக்கம் செய்யவில்லை. மீண்டும் மீண்டும்
இருசக்கர வாகனத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மோட்டார் சைக்கிள் நி்றுவனம் இருசக்கர வாகனத்தின் பழுதை நீக்கமால் அலட்சியம் செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 2022 செப்டம்பர் 23 ஆம் தேதி ஞானசேகரன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, மனுதாரர் ஞானசேகரன்
இருசக்கர வாகனம் வாங்கிய நிறுவனத்தில் சேவையில் குறைபாடு உள்ளது. வாகனத்தை உரிய முறையில் சரி செய்து தராமல் மனுதாரரை அலட்சியம் செய்துள்ளனர். எனவே, மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ .2 லட்சம் இழப்பீடு, பழுதான இருசக்கர வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம் மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை எதிர்தரப்பினரான மூன் மோட்டாஸ் விற்பனை நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-ம.பவித்ரா








