ரோஹித் சர்மாவின் உடற்தகுதியை விராட் கோலியுடன் ஒப்பிட்டு கபில்தேவ் விமர்சனம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், நட்சத்திர வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மாவை டிவியில் பார்க்க பொருத்தமாக இல்லை, அதிக எடையுடன் காணப்படுவதால் அவர் தனது உடற்தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்…

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், நட்சத்திர வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மாவை டிவியில் பார்க்க பொருத்தமாக இல்லை, அதிக எடையுடன் காணப்படுவதால் அவர் தனது உடற்தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிகளித்த பேட்டி ஒன்றில் அதிருப்தியுடன் பேசியுள்ளார்.

சமீபகாலமாக ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது பல ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது, இருப்பினும் அவற்றையெல்லாம் புறம் தள்ளி ரோஹித் சர்மா தொடர்ந்து நல்ல ஆட்டத்தினை பல போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில், அவர்
தனது சொந்த ஊரான நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 120 ரன்கள் குவித்து பலரது பாராட்டையும் பெற்றார். மேலும் நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தும் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கபில்தேவ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசும் போது இந்திய அணி வீர்களின் உடற்தகுதி குறித்த சில விமர்சங்களை முன் வைத்தார். அதில் குறிப்பாக, ரோஹித் சர்மா குறித்து அவர் பேசும்போது ” ஒரு வீரனுக்கு உடற்தகுதி என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் ஒரு கேப்டனுக்கு சரியான ஃபிட்னஸ் இல்லை என்றால் அது அவமானமானது. அதை மாற்ற ரோஹித் கண்டிப்பாக கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும். அவர் நிச்சயம் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். குறைந்த பட்சம் டிவியில் பார்க்கும் போதாவது ​​அவர் சற்று பொருத்தகமாக இருக்க வேண்டும்.

ஆனால் அவர் சற்று அதிக எடையுடன் தெரிகிறார். உண்மைதான் நீங்கள் ஒருவரை டிவியில் பார்ப்பதும், நிஜ வாழ்க்கையில் பார்ப்பதும் கொஞ்சம் வித்தியாசமாகதான் இருக்கும். இருந்தாலும், ரோஹித் ஒரு சிறந்த வீரர் மற்றும் சிறந்த கேப்டனாகவே பிரகாசித்தாலும் ஃபிட்னஸ் விஷயத்தில் நிச்சயம் கவனம் செலுத்த
வேண்டும்” என கூறினார்.

மேலும் ரோஹித் சர்மாவின் உடற்தகுதியை விராட் கோலியுடன் ஒப்பிட்ட கபில்தேவ்,
ஃபிட்னஸ் விஷயத்தில் தனது சக வீரரிடமிருந்து நிச்சயம் அவர் கொஞ்சம் உத்வேகம் பெற வேண்டும் என்றும் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.