செல்போன் வாடிக்கையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ள 5ஜி சேவையை வரும் தீபாவளி முதல் நாடெங்கிலும் தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
அதிவேக இணையதள சேவை உள்ளிட்டவற்றை அளிக்கும் 5ம் தலைமுறை செல்போன் சேவை எப்போது கிடைக்கும் என இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை உரிமத்திற்கான ஏலத்தை மத்திய அரசு சமீபத்தில் நடத்தியது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 5ஜி அலைக்கற்றை உரிமங்களை ஏலம் எடுத்தன. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 88,078 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் தீபாவளி முதல் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் கூட்டத்தில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி இந்த அறிவிப்பை வெளியிட்டார். உலகின் மிக வேகமான 5ஜி செல்போன் சேவை வரும் தீபாவளி முதல், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்படும் எனக் கூறிய முகேஷ் அம்பானி, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ கொண்டு செல்லும் என்றார். அமெரிக்கா, சீனாவை மிஞ்சும் அளவிற்கு இந்தியாவை தகவல் தொழில்நுட்ப பொருளாரத்தில் முன்னேற்ற ரிலையன்ஸ் ஜியோ துணை நிற்கும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, நாடுதழுவிய 5ஜி சேவையை வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜியோ சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை செலவிட உள்ளதாக தெரிவித்தார்.