விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக உள்ளதாக பாக்குழு அறிவித்துள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தொடர்ந்து தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் அவர் நடித்து கடைசியாக வெளியான ‘நூறுசாமி’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி மு. மாறன் இயக்கத்தில் ‘அப்பா குட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனியே நடித்து, இசையமைத்து, தயாரித்துள்ளார்.

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான எல்லையற்ற அன்பையும், பிரிக்க முடியாத பாசப் பிணைப்பையும் அழகாகக் காட்சிப்படுத்தும் ஒரு ஆக்ஷன்-குடும்பத் திரைப்படமாகும். உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடனும் வர்த்தக ரீதியான அம்சங்களுடனும் உருவாகியுள்ள இத்திரைப்படம், அனைத்து வயதினரையும் கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ், லிசி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீணா, ஹரிதா மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

​விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பாக்குட்டி’ திரைப்படம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 2026 நவம்பர் 6 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.