2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிராந்திய கட்சிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிராந்திய கட்சிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என நினைக்கிறேன். திமுக மிக முக்கியமான கட்சி. திரிணாமுல் கட்சியும் மிக முக்கியமான பங்கு வகிக்கும். சமாஜ்வாதி கட்சியும் முக்கியமானது, ஆனால் அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.
இந்தியாவுடைய நோக்கத்தை பாஜக முழுவதுமாக குறைத்துவிட்டது. இந்தியா என்றால் ’இந்து-இந்தியா’ மற்றும் ‘இந்தி பேசும் இந்தியா’ என்றுமளவுக்கு இந்தியாவை சுருக்கிவிட்டது. பாஜகவுக்கு மாற்று இல்லை என்றால் அது இன்னும் மோசமானதாக மாறக்கூடும்.
பாஜக எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ அதே அளவுக்கு அக்கட்சிக்கு பின்னடைவான காரணிகளும் உள்ளது. மற்ற கட்சிகள் அதை எடுத்து விவாதிக்க வேண்டும். மம்தா பானர்ஜி நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதி உள்ளது. ஆனால் . மறுபுறம், பாஜக எதிரான சக்திகளை ஒன்றிணைத்து இந்தியாவில் பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தலைமைத்துவத்தை மம்தாவால் இன்னும் நிகழ்த்தி காட்டமுடியவில்லை.
2024ம் ஆண்டு காங்கிரஸ் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் மட்டுமே அனைவருக்குமான இந்தியா என்ற நோக்கத்தை கொண்டிருக்கிறது. இவ்வாறு அமர்த்தியா சென் தெரிவித்தார்.







