கேரளாவிற்கு அடுத்த 4 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

வரும் ஜூன் 14 முதல் 17 ஆம் தேதிவரை கேரளத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய தெலங்கானா மற்றும் ராயலசீமாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியுள்ளதால், கேரளாவின் மேற்கு திசையில் காற்று வலுவடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென்னிந்தியாவில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 14 முதல் 16 வரை சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 14 முதல் 16 வரை கேரளாவில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 14 ஆம் தேதியும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 15 ஆம் தேதியும், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு 16 ஆம் தேதியும், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு 17 ஆம் தேதியும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் 204.4 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.