எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடந்த மாதம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 19 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட 19 மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மீனவர்களை விசாரணை நடத்திய நீதிபதி கடந்த 12ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் 19 மீனவர்களுக்கும் கடந்த 12ம் தேதி சிறைக்காவல் முடிந்தது. ஆனால் இலங்கையில் அன்றைய தினம் விடுமுறை என்பதால் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் காவல் நீட்டிப்பு தேதி பெறுவதற்காக அதிகாரிகள் மட்டும் நீதிபதி வீட்டிற்கு சென்றனர்.
இதையடுத்து இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்ற நீதிபதி ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேருக்கு இன்று (18ம் தேதி) வரை சிறைக்காவலை நீட்டிப்பு
செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறைக் காவல் முடிந்து 19 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதுதொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தியதில் மீனவர்கள் தாங்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததை ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் 19 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்கள் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.