விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

நெல்லை மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் பள்ளி மாணவர்களை பாதுகாப்பற்ற முறையில் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  பகிரப்பட்டு வருகிறது.  இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிச்செல்லும் குழந்தைகளை ஆட்டோக்கள் வீட்டிலிருந்தே  ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு…

நெல்லை மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் பள்ளி மாணவர்களை பாதுகாப்பற்ற முறையில் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  பகிரப்பட்டு வருகிறது. 

இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிச்செல்லும் குழந்தைகளை ஆட்டோக்கள் வீட்டிலிருந்தே  ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆட்டோவில் தான் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 27ந்தேதி தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 8 பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ அனவரதநல்லூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எல்.கே.ஜி படித்து வந்த சிறுவன் செல்வநவீன் ஆட்டோவிற்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தான். மேலும், 5 குழந்தைகள் காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒரு ஆட்டோவில் அதிக மாணவர்களை ஏற்றிகொண்டு செல்லக்கூடாது எனவும், ஆட்டோ ஓட்டுநரின் இருக்கையில் மாணவர்களை அமர வைக்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு ஆட்டோவில் மாணவர்களை ஏற்றுச் செல்லும் சம்பவம் தற்போதும் நடக்க தான் செய்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அரசின் விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ ஓட்டுநர் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படங்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றி செல்வதும், ஓட்டுநரின் பக்கத்தில் மாணவர்கள் அமர்ந்திருப்பதும், ஆட்டோவின் பின்புறம் பாதுகாப்பற்ற முறையில் மாணவர்களை அமர வைத்திருப்பதும் தெரிகிறது.

எனவே இதுபோன்று அதிக மாணவர்ககளை ஏற்றி செல்லும் ஆட்டோ ஓட்டுநர் மீது காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.