மாநிலங்களவை தேர்தலிலும் ’ரிசார்ட்’ அரசியல் ஆட்டம்

மாநிலங்களவை தேர்தலில் அந்த 6வது இடம் யாருக்கு என்கிற கேள்விதான் தற்போது மகாராஷ்டிரா அரசியலில் கொளுத்திப்போடப்பட்ட நெருப்புத்துண்டு. ஆட்சி மாற்றங்களின்போதே ஆட்டம்போடும் ரிசார்ட் அரசியல் மாநிலங்களவை தேர்தலிலும் அங்கு எட்டிப்பார்த்துள்ளது. அடுத்த 3 மாதங்களில்…

மாநிலங்களவை தேர்தலில் அந்த 6வது இடம் யாருக்கு என்கிற கேள்விதான் தற்போது மகாராஷ்டிரா அரசியலில் கொளுத்திப்போடப்பட்ட நெருப்புத்துண்டு. ஆட்சி மாற்றங்களின்போதே ஆட்டம்போடும் ரிசார்ட் அரசியல் மாநிலங்களவை தேர்தலிலும் அங்கு எட்டிப்பார்த்துள்ளது.

அடுத்த 3 மாதங்களில் மாநிலங்களவையில் 57 எம்.பிக்களின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் அந்த இடங்களை நிரப்புவதற்காக வரும் 10ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 41 எம்.பிக்கள் போட்டியின்றி மாநிலங்களவைக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் எஞ்சியுள்ள 16 உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டிய 4 மாநிலங்களில்தான் கடும்போட்டி நிலவுகிறது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா ஆகிய அந்த 4 மாநிலங்களில்தான் மாநிலங்களவை தேர்தல் அனல் பறந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அரசியல் மல்யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அங்கு தொங்கு சட்டப்பேரவை அமைந்ததிலிருந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் வரை எந்த பரபரப்பு நிலவியதோ கிட்டத்தட்ட அதே பரபரப்புதான் தற்போதும்.

2017ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைவதற்கு முன்பாக கூவத்தூர் என்ற பெயர் தமிழ்நாட்டு அரசியலில் எப்படி அழுத்தமாக பதிந்ததோ அதே போலத்தான் 2019ம் ஆண்டு மகாராஷ்டிர அரசியலில் ரீடிரீட் நட்சத்திர விடுதியின் பெயர் பதிந்தது. மேற்கு மும்பையின் புறநகர் பகுதியான மலாட்டில் உள்ள அந்த நட்சத்திரவிடுதியில்தான் தங்களது மலரும் நினைவுகளை அசைபோட்டுகொண்டிருக்கிறார்கள் சிவசேனா எம்.எல்.ஏக்கள். பாஜக வசம் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்களது எம்.எல்.ஏக்களை அடைகாத்து வைத்துள்ளன.

மகாராஷ்டிராவில் மொத்தம் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. ஒவ்வொரு இடத்தையும் தக்கவைக்க 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்கிற அடிப்படையில் சிவசேனா கூட்டணிக்கு 3 இடங்களும், பாஜகவிற்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதியாகியுள்ளன. ஆனால் அந்த 6வது இடம் யாருக்கு என்பதுதான் மாநிலங்களவை தேர்தலை மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவை நோக்கி தள்ளியுள்ளது. அந்த இடத்திற்கும் ஆளும் சிவசேனா கூட்டணியும், எதிர்க்கட்சியான பாஜகவும் வேட்பாளரை களம் இறக்கியுள்ளது பலப்பரிட்சையை உறுதியாகியுள்ளது.

சிவசேனா 55, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 என மொத்தம் 153 எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஆளும் கூட்டணிக்கு உள்ளது. இதில் இரண்டு எம்.எல்.ஏக்கள் சிறையில் உள்ளது சிவசேனா கூட்டணிக்கும் மற்றொரு சிக்கல். ஏற்கனவே உறுதி செய்த 3 இடங்கள்போக மேலும் ஒரு இடத்தையும் உறுதி செய்வதற்கு கூடுதலாக 15 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அந்த கூட்டணிக்கு தேவை. ஏற்கனவே 2 இடங்களை உறுதி செய்துள்ள எதிர்க்கட்சியான பாஜக, 3வது இடத்தையும் கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கியுள்ளது. 106 எம்.எல்.ஏக்களை தன் வசம் வைத்துள்ள பாஜகவிற்கு மேலும் 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

மொத்தம் 288 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மகாராஷ்டி சட்டப்பேரவையில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 29. அந்த எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற ஆளும் சிவசேனா கூட்டணியும், எதிர்க்கட்சியான பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு எம்.எல்.ஏ அணி மாறி ஓட்டுப்போட்டாலும் முடிவுகள் மாறக்கூடும் என்பதால் தங்கள் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் எதிரணியின் குதிரை பேரத்தில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டிய நெருக்கடியும் பிரதான கட்சிகளுக்கு எழுந்துள்ளன. இந்த சூழலில்தான் ரிசார்ட் அரசியல் மகாராஷ்டிராவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. வரும் 10ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அங்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.