முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அன்றே சொன்ன ரஜினி ஹேஷ்டாக்!

அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ்டாக், தற்போது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறி, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். எனினும், தனது அந்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதே தனது இந்த முடிவுக்குக் காரணம் என கூறி இருந்தார். அதோடு, இந்த கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்பொழுது வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் ரஜினி தனது அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியது இல்லை என்றும் ரஜினி கூறி இருந்தார்.

அவரது அந்த 3 பக்க அறிக்கையில் சொல்லப்பட்ட இந்த முக்கிய விஷயங்களை பிரித்து எடுத்து, தற்போது வைரலாக்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள். இதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் ஹேஷ்டாக்தான் அன்றே சொன்ன ரஜினி.

ரஜினி அன்று சொல்லியவாறே, உருமாறிய கொரோனா இரண்டாவது அலையாக வந்து மிகப் பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதை சுட்டிக்காட்டும் அவரது ரசிகர்கள், தனது முடிவின் மூலம், ரசிகர்களை ரஜினி காப்பாற்றி இருப்பதாகக் கூறி நெகிழ்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்திருப்பதையும், தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றமே சுமத்தலாம் என்று நீதிபதிகள் கூறி இருப்பதையும் சுட்டிக்காட்டும் ரஜினி ரசிகர்கள், கொரோனா இரண்டாவது அலையின் கொடூரத்தை முன்கூட்டியே சரியாக கணித்தவர் ரஜினி என புகழாரம் சூட்டுகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ சேவை! ஆசிரியர் டு ஆட்டோ டிரைவர்!

Gayathri Venkatesan

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: டார்கெட் நிர்ணயத்த மாநகராட்சி!

Gayathri Venkatesan

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நீட் தேர்வு ரத்து செய்ய உறுதி

Jeba Arul Robinson