தமிழ் வளர்ச்சித் துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்த 80 கோடி ரூபாய் நிதியை, 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் விழாவில், பங்கேற்ற தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல்லியோனி திரைப்பட பாடல்களின் இலக்கியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பின்னர்,பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழ் இனம், தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி உள்ளிட்டவை மிக தொன்மையானவை என்ற பெருமையுடன், கர்வமும் இருந்தால் தான் மொழி அழியாமல் பாதுகாக்கப்படும். பிறமொழி கலக்காத வகையில், தமிழ்மொழியை பேசவேண்டும்.
மாணவர்களிடம் வாசிப்புதிறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி நூலகங்களில் வாசிப்பதற்காக தனிநேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். அதோடு, புத்தகங்களை அச்சடித்து கொடுப்பதோடு மட்டுமின்றி ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் நூலகம் இருக்க வேண்டும் என்று உத்தரவிடுங்கள் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அரசு அமைப்புகளில் வாசகர்அறை ஒன்றை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், தமிழ்வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ள 80 கோடி ரூபாயினை 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இலக்கிய படைப்புகள் எழுத தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டும் எனவும் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.








