சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்று மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில், ஒப்பந்ததாரர்களிடம் ஆட்கள் பற்றாக்குறைகள் காரணாக சென்னையில் சில இடங்களில் திட்டப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சிரமங்களை பொதுமக்கள் பொறுத்தருள வேண்டும். விரைந்து மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். மாநகராட்சி மற்ற அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்படுவதால் திட்டப் பணிகளில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மழை நீர் வடிகால் கட்டமைக்காததால், முதலமைச்சர் உத்தரவின் பெயரில் எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து காவல் துறையிடம் இணைந்து மாற்றுப் பாதையில் வாகனங்களை செலுத்த அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம். காய்ச்சல் பரிசோதனைக்கான சிறப்பு முகாம்களும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் அறிவுரைக்கு ஏற்ப வடகிழக்குப் பருவமழைக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.
-ம.பவித்ரா








