அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை தொடரும்

சென்னை மற்றும் அதனுடைய புறநகர் பகுதியில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே போல மழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர்…

சென்னை மற்றும் அதனுடைய புறநகர் பகுதியில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே போல மழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை ஒய்ந்து பனிக்காலம் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் தொடர்மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக 5 மணி நேரத்திற்கும் மேலாக அடைமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஒட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்.

இடியுடன் கூடிய மழையால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. மட்டுமல்லாது வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ இரயில்கள் சேவையில் பாதிப்பில்லாமல் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

அதேபோல விமான சேவை பாதிப்பில்லாமல் 10 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல இடங்களில் மிக கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் அதனுடைய புறநகர் பகுதியில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திலிருந்து சென்னை மக்கள் மெள்ள மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் மழை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மழையையொட்டி சென்னை போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பெருநகர போக்குவரத்து காவல்துறை கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி கெங்கு ரெட்டி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கபாதை, ஆர்.பி.ஐ சுரங்கபாதை உள்ளிட்ட சுரங்கப்பாதைகள் மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மழைநீர் தேங்கியுள்ளதால் கே,கே நகர் – ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர் – டாக்டர் சிவசாமி சாலை, ஈ வி ஆர் சாலை – காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம் – ஜவஹர் நகர் 20 அடி சாலை, குளத்தூர் விநாயகபுரம் – ரெஹில்ஸ் ரோடு, 100 அடி சாலை பெரியார் பாதை மற்றும் நுங்கம்பாக்கம் லேக் வியூ ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மட்டுமல்லாது சாலையில் பள்ளம் ஏதும் இல்லை என்றும், மரங்கள் ஏதும் விழவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம்; சென்னையில் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி தீவிரம் காட்டிவருகிறது. மேலும், கன மழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.