செப்டம்பர் 7ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி முக்கிய ஆலோசனை?

செப்டம்பர் மாதம் தமிழ்நாடு வர உள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.…

செப்டம்பர் மாதம் தமிழ்நாடு வர உள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணம் ஒன்றை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்களுக்கு பாத யாத்திரை மேற்கொள்ள உள்ள ராகுல்காந்தி அந்த பயணத்தை வரும் 7ந்தேதி தொடங்குகிறார். மத்திய பாஜக அரசுக்கு எதிரான அலையை மக்களிடையே உருவாக்கும் நோக்கத்துடன் ராகுல்காந்தி இந்த பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த யாத்திரைக்காக வரும் 7ந்தேதி தமிழகம் வரும் ராகுல்காந்தி சென்னையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார், அப்போது நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.