ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் மாணவி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ராகுல் காந்தி பயணித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (23.09.2023) ஒருநாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றுள்ளனர். ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் புதிய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர்.
அந்த வகையில் ஜெய்ப்பூர் மகாராணி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு சாதனை மாணவிகளுக்கு இருசக்கர வாகனங்களை ராகுல் காந்தி வழங்கினார். அதன்பின்னர் மாணவி ஒருவரின் இரு சக்கர வாகனத்திலும் ராகுல் காந்தி பின்னால் அமர்ந்து பயணித்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. ராஜஸ்தானில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.







