ஃபகத் பாசில் 41-வது பிறந்தநாள் – போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த புஷ்பா 2 படக்குழு!

ஃபகத் பாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படக்குழுவினர், பன்வர் சிங் ஷெகாவத் சார் பழிவாங்கலுடன் மீண்டும் பெரிய திரைகளில் வருவார் என கூறி போஸ்டர் வெளியிட்டு அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.…

ஃபகத் பாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படக்குழுவினர், பன்வர் சிங் ஷெகாவத் சார் பழிவாங்கலுடன் மீண்டும் பெரிய திரைகளில் வருவார் என கூறி போஸ்டர் வெளியிட்டு அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ஃபகத் பாசில் தனது 41வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பூவே பூச்சூடவா, வருஷம் 16, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட படங்களை இயக்கிய பாசிலின் மகன்தான் ஃபகத் பாசில்.

மலையாள சினிமாவில் ”கையேதும் தூரத் “ எனும் படத்தின் மூலம் அறிமுகமான ஃபகத் பாசில் பெங்களூர் டேஸ், கும்பலாங்கி நைட்ஸ், மஹேஷின்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனது தனித்துவமான நடிப்பின் மூலமும், காத்திரமான கண் அசைவுகளின் மூலம் மலையாள சினிமா மட்டுமல்ல தென் இந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை அவர் கொண்டுள்ளார்.

தமிழில் ஃபகத் பாசில் சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. எதிர்மறையான ரத்னவேலு கதாபாத்திரத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்த நிலையில், ஃபகத் பாசிலின் 41-வது பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படக்குழுவினர் பன்வர் சிங் ஷெகாவத் சார் பழிவாங்கலுடன் மீண்டும் பெரிய திரைகளில் வருவார் என கூறி தங்களது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அவருக்கு, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா 1 தி ரைஸ். இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் ரஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஃபகத் பாசில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் PUSHPA THE RULE படத்தில் பன்வர் சிங் செகாவத் கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் நடித்துள்ளார். பழிவாங்கும் நோக்கத்துடன் வந்து விட்டார் என பகத் பாசிலின் புகைப்படத்தை அண்மையில் படக்குழு வெளியிட்டிருந்தது மட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபகத் பாசிலின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/PushpaMovie/status/1688780714224095232?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.