புதுச்சேரி மாநிலத்தின் 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர்
துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை, அதற்கு பதிலாக 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. கூட்டத்தொடரை துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றி தொடங்கி வைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காலை 9.25 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து சட்டசபைக்கு வரும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து சபாநாயகர் செல்வம், சட்டசபை செயலர் முனிசாமி ஆகியோர் வரவேற்று சட்டசபை மைய மண்டபத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். பின்னர் 9.30 மணிக்கு சபை நிகழ்வுகள் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றுகிறார். வழக்கமாக சட்டசபையில் முந்தைய ஆளுநர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுவார்கள். பின்னர், அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பார். ஆனால் கடந்த ஆண்டு முதல் துணைநிலை ஆளுநர்தமிழிசை செளந்தரராஜன் தமிழிலேயே உரையாற்றுகிறார்.
இதனால் சபாநாயகர் உரை வாசிப்பின்றி சட்டசபை மறுநாளுக்கு ஒத்தி
வைக்கப்படுகிறது.
தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வியாழன், வெள்ளி கிழமைகளில் விவாதம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர். மீண்டும் 17ம் தேதி சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது. தொடர்ந்து சட்டசபை 10 நாட்களுக்கும் மேலாக பட்ஜெட், மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது.