சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்-ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் இன்றுடன் நிறைவு பெற்றது. குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெறும் ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க்…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் இன்றுடன் நிறைவு பெற்றது. குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெறும் ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த நான், இன்று நாட்டுமக்களாகிய உங்கள் அனைவருக்கும் முன் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன். எனது பதவிக் காலத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் முழு ஒத்துழைப்பும், ஆதரவும், ஆசிகளும் பெற்றேன்.

5 வருடங்களுக்கு முன்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். குடியரசுத் தலைவராக எனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி விலகும் நாளை முன்னிட்டு, உங்களுக்கும் உங்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டை கட்டமைப்பது குடிமக்களே. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

நமது நாடு 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடவுள்ளோம். 100 ஆண்டுகளை நோக்கி நாம் நகர உள்ளோம். பொதுமக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஜனநாயகத்தின் தூண்கள் இணைக்கப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தால் உருவானது நமது இந்தியா. வேற்றுமையைத் தாண்டி நாம் உயர வேண்டும்.

குடியரசுத் தலைவராக இருந்தபோது எனது சொந்த கிராமத்திற்குச் சென்று நான் படித்த பள்ளியில் உள்ள வயதான ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றது என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும்.

நமது வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு. இளைய தலைமுறையினர் தங்கள் கிராமம் அல்லது நகரம் மற்றும் அவர்களின் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நமது அன்றாட வாழ்க்கையிலும், வழக்கமான தேர்வுகளிலும், இயற்கையையும் மற்ற எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கு நம் நாடு தயாராகி வருகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் ராம்நாத் கோவிந்த்.

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.