தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி-தகவல் அளித்தால் வெகுமதி!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி. இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ஒரு முறை பயன்படுத்தி…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி.

இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதும்; சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அந்த தொழிற்சாலைகளை மூடும் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இருப்பினும் குடியிருப்பு வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள், எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. எனவே சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புகார்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம் எனவும், புகார்களை மின்னஞ்சல் கடிதம் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுப்பதை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியத் தன்மை கண்டிப்பாக பராமரிக்கப்படும் என்பதால் மக்கள் அச்சப்படத்தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவர்களின் இந்த பங்களிப்பிற்காக பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.