கும்பமேளா மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பளித்த தயாரிப்பாளர் பாலியல் வழக்கில் கைது!

மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசா போஸ்லேவுக்கு சினிமா வாய்ப்பளித்த தயாரிப்பாளர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் சமீபத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி 45 நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என கோடிக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார்.

அந்த பெண்ணை யூடியூபர் ஒருவர் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்ய,  சமூக வலைதளங்களில் அந்த வீடியோவைரலானது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு ‘மோனலிசா போஸ்லே’  என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டினர். தொடர்ந்து கும்பமேளாவில் அந்த பெண்ணுடன் பலரும் செல்ஃபி எடுக்க கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர். இதையறிந்த பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான சனோஜ் மிஸ்ரா, தனது  ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ படத்தில் மோனலிசாவை நாயகியாக நடிக்கவைக்க இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இளம் பெண் ஒருவர், சனோஜ் மிஸ்ரா தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி  தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம், தான் கடந்த 2020ல் ஜான்சியில் வசிக்கும்போது டிக்டாக்  மூலம் சனோஜ் மிஸ்ரா தொடர்பு கொண்டு காலப்போக்கி அடிக்கடி பேசி வந்ததாகவும், அவர் தன்னை அழைத்து மிஸ்ரா பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் போதைப் பொருள் கொடுத்து ஆபாச வீடியோக்களை பதிவு செய்து மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.