காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்திக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா கண்டறியப்பட்டது.
Tested positive for covid (again!) today. Will be isolating at home and following all protocols.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 10, 2022
இந்நிலையில், பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று மீண்டும் கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பிரியங்கா காந்தி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
-ம.பவித்ரா








