தேசிய கல்விக் கொள்கையை தனியார் பல்கலை. அமல்படுத்துகின்றனவா? துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆலோசனை!

தேசிய கல்விக் கொள்கையை ஆர்வத்துடன் செயல்படுத்தும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த, 2020ம் ஆண்டு, தேசிய கல்வி கொள்கையை, மத்திய அரசு கொண்டு வந்தது. இதை, நாடு முழுவதும்,…

தேசிய கல்விக் கொள்கையை ஆர்வத்துடன் செயல்படுத்தும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த, 2020ம் ஆண்டு, தேசிய கல்வி கொள்கையை, மத்திய அரசு கொண்டு வந்தது. இதை, நாடு முழுவதும், ஒரு சில மாநிலங்கள், ஏற்றுக் கொண்டபோதும், தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில், உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து, தனியார் பல்கலைக்கழகத்  துணை வேந்தர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கவர்னரின் செயலர் ஆனந்த் ராஜ், விஷ்ணு பட்டேல் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் தனியார் பல்கலைகழகங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அந்தந்த பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தப்படுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆளுநரிடம் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேசிய கல்விக்கொள்கையை ஆர்வத்துடன் செயல்படுத்தும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கை என்பது சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட கொள்கை என்பது மட்டுமல்லாமல் புரட்சிகரமான மாற்றத்திற்கான கொள்கை என ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

மேலும் தேசிய விடுதலைக்கு போராடிய வீரர்கள் பலர் அறியப்படாமல் இருப்பதாகவும், அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தவும் துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.