மத்தியப்பிரதேச மாநிலத்தில் 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியன் ரயில்வே உலகிலேயே மிகப்பெரிய ரயில் சேவை. இதில் சுமார் 12.54 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.அதேபோல் ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்நிலையில் ரயில் சேவையை நவீனப்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் புதிதாக 5 வந்தே பாரத் ரயில்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயில் சேவையை போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.







