தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் 13ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 2023 2024ஆம் கல்விஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.நாளை முதல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnhealth.tn.gov.in இன் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






