பிரதமரின் வீடு கட்டும் திட்டம்; ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்…

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும், 2022ம் ஆண்டிற்குள் நகர்ப்புறப் பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும் கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) மத்திய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இத்திட்டத்தை பிரதமர் வீடு வழங்கும் திட்டம் நகரம் (PMAY-U) என உள்ளது. இதற்கு, தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் மாநில முகமை நிறுவனமாக உள்ளது. கிராம ஊராட்சிகளில் மாநில ஊரக வளர்ச்சித்துறை அரசு முகமை நிறுவனமாக உள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கிராமம், நகரம் ஆகிய இரண்டிலும் 2022-23ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டிற்கும் மேலும் 1.72 கோடி வீடுகள் கட்டப்படும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் ரூ.547 கோடியும் மாநில அரசின் பங்கான 365 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.2.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதில் சிக்கல் எழுந்த நிலையில், அவர்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.914 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.