பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் முதலாவதாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜோர்டான் புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின்போது ஜோர்டான் மன்னருடன் இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து நேற்று முன்தினம் (டிச.16) பிரதமர் மோடி எத்தியோப்பியா சென்றார். பிரதமர் மோடி விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி வரவேற்றார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து பிரதமர் மோடி நேற்று ஓமன் புறப்பட்டு சென்றார். ஓமனின் மஸ்கட் நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு துணை பிரதமர் சயீத் ஷிஹாப் பின் தாருக் அல் சையத் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அப்போது பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மேள தாளங்கள் முழங்க, இசை கச்சேரி நடத்தியும், சிறுவர் சிறுமிகளின் பாரம்பரிய நடனமும் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வந்தே மாதரம் என்றும் பாரத் மாதா கி ஜெய் என்றும் கோஷம் எழுப்பப்பட்டது.
பின்னர் அவரை பார்ப்பதற்காக திரண்டிருந்த இந்திய வம்சாவளியினரை சந்தித்து, அவர்களுடன் கைகுலுக்கி பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அவர்கள் மோடி ஜி, மோடி ஜி என உற்சாகத்தில் கோஷமும் எழுப்பினர். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “ஓமனில் உற்சாக வரவேற்பு அளித்ததற்காக நன்றி. ஓமனில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாசப்பிணைப்பு மற்றும் ஆர்வம் உண்மையில், இரு நாடுகளுக்கு இடையேயுள்ள, மக்களுடனான உறுதியான பிணைப்பை பிரதிபலிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இந்த பயணத்தில் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரீக்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். அப்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கலாசார பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







