நாளை உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை உத்தரகண்ட் செல்கிறார்.

இந்த ஆண்டு அதீத மழைபொழிவானது வட இந்திய மாநிலங்களை வாட்டி வருகிறது. முக்கியமாக காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சாரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆக.5-ஆம் தேதி உத்தரகாசியில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அப்பகுதில் பெருவெள்ளமும், மற்றும் பயங்கர நிலச்சரி ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 69 பேர் மாயமாகினர். தொடர்ந்து சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 11 போ் மாயமாகினர்.

இந்த நிலையில் பிரதமர்  நரேந்திர மோடி செப்டம்பர் 11 ஆம் தேதி உத்தரகாண்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4:15 மணியளவில், உத்தரகாண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்வார். எனவும் மாலை 5 மணியளவில், பிரதமர் மோடி தலைமையில் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாளை உத்தரபிரதேசம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி அங்கு  இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள  மொரீஷியஸ் பிரதமர் மேதகு நவின்சந்திர ராம்கூலமை  சந்திக்கிறார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.