மேற்கு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்ட நாடு செஷல்ஸ். இங்கிலாந்து நாட்டிடமிருந்து 1976 ஜூன் 29 ஆம் தேதி செஷல்ஸ் சுதந்திரம் பெற்றது. இந்த நாள் அந்நாட்டின் தேசிய தினமனாக கொண்டாடப்படுகிறது.
2026 ஜூன் 29 ஆம் தேதி செஷல்ஸ் நாட்டின் தேசிய தினத்தின் பொன்விழா (50 ஆம் ஆண்டு) கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டங்களில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று செஷல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி ஜூன் 27 முதல் 29 வரை 3 நாள் அரசு பயணமாக செஷல்ஸ் புறப்பட்டார்.
இந்தியாவுக்கும் செஷல்ஸிற்கும் இடையிலான தூதரக உறவுகளை போற்றும் வகையில் ஜூன் 29 ஆம் தேதி அந்நாட்டின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இக்கொண்டாட்டங்களில், இந்தியப் பாதுகாப்புப் படையினரின் ஒரு குழுவும், இரண்டு இந்தியக் கடற்படைக் கப்பல்களும் பங்கேற்கின்றன.
செஷெல்ஸ் தேசிய தாவரவியல் பூங்காவிற்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து கடல்சார் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம், பருவநிலை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்யவும் விரிவுபடுத்தவும், செஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினியுடன் இந்திய பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.
பிரதமர் மோடி கடைசியாக 2015-ல் செஷெல்ஸுக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




