நாட்டின் 15வது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
எனவே, அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த சூழலில், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி இருக்குமா? அல்லது அடுத்த குடியரசுத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்விகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்த கேள்விகளுக்கு விடை காண, கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
- நாடு குடியரசான பிறகு 1952ல் நடைபெற்ற முதல் குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே போட்டி இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பாபு ராஜேந்திர பிரசாத், கே.டி. ஷா என்பவரை தோற்கடித்தே குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.
- 1957ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் பாபு ராஜேந்திர பிரசாத். அவரை எதிர்த்து செளத்ரி ஹரி ராம், நாகேந்திர நாராயண் தாஸ் ஆகிய இருவர் போட்டியிட்டனர். இருவரையும் தோற்கடித்தார் பாபு ராஜேந்திர பிரசாத்.
- 1962ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட செளத்ரி ஹரி ராம், யமுனா பிரசாத் திரிசூலியா ஆகியோரைத் தோற்கடித்தே குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்தார்.
- 1967ல் நடைபெற்ற நாட்டின் 4வது குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டாக்டர் ஜாகீர் ஹூசைன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காக்கா சுப்பாராவ் என்பவரைவிட அதிக வாக்குகள் பெற்று குடியரசுத் தலைவரானார்.
- ஜாகீர் ஹூசைனின் மறைவை அடுத்து 1969ல் நடைபெற்றது நாட்டின் 5வது குடியரசுத் தலைவர் தேர்தல். இதில், சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி வி.வி. கிரி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி தோல்வி அடைந்தார்.
- 1974ல் நடைபெற்ற 6வது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறங்கிய ஃபக்ருதீன் அலி அகமது வெற்றி பெற்றார். இவரிடம், திரிதிப் செளத்ரி தோல்வி அடைந்தார்.
- குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவின் மறைவை அடுத்து 1977ல் 7வது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு எதிராக 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்த போதும், அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.
- 1982ல் நடைபெற்ற நாட்டின் 8வது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சீக்கியரான கியானி ஜெயில் சிங், ஹெச்.ஆர். கன்னாவை தோற்கடித்து குடியரசுத் தலைவரானார்.
- நாட்டின் 9வது குடியரசுத் தலைவர் தேர்தல் 1987ல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆர். வெங்கட்ராமன். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர்.
- 1992ல் நடைபெற்ற 10வது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா. இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜி.ஜி. ஸ்வெல் என்பவரைத் தோற்கடித்து குடியரசுத் தலைவரானார்.
- 1997ல் நடைபெற்ற 11வது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான கே.ஆர். நாராயணனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் முன்னாள் தேர்தல் ஆணையரான டி.என். சேஷன்.
- நாட்டின் 12வது குடியரசுத் தலைவர் தேர்தல் 2002ல் நடைபெற்றது. இதில், பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் அப்துல் கலாம். இவரை எதிர்த்த லக்ஷ்மி ஷெகல் தோல்வி அடைந்தார்.
- 2007ல் நடைபெற்ற 13வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார் பைரோன் சிங் ஷெகாவத். இவருக்கு எதிராக காங்கிரஸ் பிரதிபா பாட்டீலை நிறுத்தியது. பிரதிபா பாட்டீல் வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவரானார்.
- 2012ல் நடைபெற்ற 14வது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பிரணாப் முகர்ஜி. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட பி.ஏ. சங்மா தோல்வி அடைந்தார்.
- 2017ல் நடைபெற்ற 15வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் தற்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களம் கண்டவர் மீரா குமார்.
நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் முதல் தற்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் வரை – நீலம் சஞ்சீவி ரெட்டியை தவிர்த்து – அனைவருமே தேர்தலை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்றே குடியரசுத் தலைவர்களாகி இருக்கிறார்கள்.
அடுத்த 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் எதிர்க்கட்சிகளின் அரசியல் இனிமேல்தான் கூர்மை அடைய இருக்கிறது. அந்த வகையில், எதிர்க்கட்சிகள் தங்கள் வலிமையை ஆளும் கூட்டணிக்கு உணர்த்த கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பாகவும் குடியரசுத் தலைவர் தேர்தலை பார்க்க முடியும்.
ஜனநாயகத்தில் போட்டி மிகவும் அவசியம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மிகப் பெரிய பதவியாக இருக்கும் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டி இன்றி இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே கடந்த காலங்களிலும்கூட போட்டி இருந்திருக்கிறது.
எனவே, இம்முறையும் போட்டி இருக்கும் என்றே கூறலாம்.





















