குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளின் மொத்த வாக்கு மதிப்பு 76,378 ஆக உள்ளது. இதில் ஒவ்வொரு கட்சிகளின் பங்கு என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்.பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகும். சிக்கிம் மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏவின் வாக்கு மதிப்பு 7 ஆகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு 176. நாடு முழுவதும் ஒரு எம்.பிக்கு ஒட்டு மதிப்பு 700 ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 41,184 ஆகும். இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தமிழ்நாடில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளின் மொத்த வாக்கு மதிப்பு 76,378.
மொத்த வாக்கு மதிப்பான 76,378-ல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 62,884 ஆக உள்ளது. 133 எம்.எல்.ஏக்கள் மற்றும் 34 எம்.பிகளை கொண்ட திமுகவிற்கு மட்டும் 47,208 வாக்குகள் உள்ளன. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக முக்கியப் பங்கு வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் 8 எம்.பிக்கள் இருப்பதால் அக்கட்சியின் வாக்கு மதிப்பு 9,468 ஆக உள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 3,504 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2,104 வாக்குகளும் உள்ளன. ம.தி.மு.க 700 வாக்குகளைக் கொண்டுள்ளது.
அதிமுகவிற்கு 66 எம்.எல்.ஏக்களும், 6 எம்.பிக்களும் உள்ளனர். இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் மொத்த வாக்கு மதிப்பு 15,116 ஆக உள்ளது. இதேபோல், பா.ம.கவுக்கு 1,508 வாக்குகள் உள்ளன. ஒரு எம்.பி பதவியை கொண்டுள்ள தமிழ் மாநில காங்கிரசுககு 700 வாக்குகள் உள்ளன.
– இரா.நம்பிராஜன்