மாணவர்கள் தாய்மொழியில் அறிவியலை கற்றால் அத்துறையில் மிகவும் சிறந்து விளங்குவார்கள் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒடிசாவில் தமது கிராமத்திலிருந்து முதல் முறையாக கல்லூரிக்குச் சென்ற பெண் தாம்தான் என்றும், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமே தம்மை கல்லூரி படிப்புக்கு அழைத்துச் சென்றது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய கல்வி கட்டமைப்புகளில் இந்தியாவின் பள்ளிக் கல்வியும் ஒன்று என பெருமிதத்துடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறிப்பிட்டார். அறிவியல், இலக்கியம், சமூக அறிவியல் போன்ற பாடங்களை தாய் மொழியில் பயிற்றுவித்தால் அத்துறைகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.







