4 பேருக்கு ‘பாரத ரத்னா’ விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக…

முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களை கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில்,  மத்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ,  பத்ம பூஷன்,  பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.  இதில், ‘பாரத ரத்னா’ விருது  நாட்டிலேயே மிக உயரிய விருதாகும்.  இதையடுத்து, இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : 4 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த ஏடிஎம் கொள்ளையர் தேனியில் கைது!

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ்,  சரண் சிங்,  பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன்,  மறைந்த முன்னாள் பீகார் மாநில முதலமைச்சர் கர்பூரி தாக்கூர்,  பாஜக தலைவராகவும் துணை பிரதமராகவும் பணியாற்றிய எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது.  இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.  இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,  பிரதமர் நரேந்திர மோடி,  மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ்,  சரண் சிங் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பி.பி. பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்டார்.  சரண் சிங் சார்பில்,  அவரது பேரன் ஜெயந்த் சௌதரி விருதினை பெற்றுக்கொண்டார்.

பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.  அவரது மகள் நித்யா ராவ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார்.  மறைந்த முன்னாள் பிகார் மாநில முதலமைச்சர் கர்பூரி தாக்குரின் விருதை அவரது மகன் ராம் நாத் தாக்குர் பெற்றுக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.