“ஜூன் 9-ல் பிரேம்ஜிக்கு திருமணம்” – இயக்குநர் வெங்கட் பிரபு தகவல்!

வரும் ஜூன் 9ம் தேதி பிரேம்ஜிக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரவு தெரிவித்துள்ளார்.  நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி.  இவர் சென்னை 28, மங்காத்தா,  கோவா,  மாஸ், …

வரும் ஜூன் 9ம் தேதி பிரேம்ஜிக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரவு தெரிவித்துள்ளார். 

நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி.  இவர் சென்னை 28, மங்காத்தா,  கோவா,  மாஸ்,  சேட்டை உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  கடைசியாக சத்திய சோதனை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  வெங்கட் பிரபு – அஷோக் செல்வன் கூட்டனியில் வெளியான மன்மத லீலை படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில்  உருவாகும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.  இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு, பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இந்த நிலையில் திருமணத்தை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில்,  “இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும்,  அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும்,  பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. “பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?”  “சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?” இதை எல்லாவற்றையும் விட, “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில்,  வரும் ஜூன் 9ம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.

அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!  இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ,  அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன.

மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை.  திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்!  GOAT அப்டேட் விரைவில்..  இப்படிக்கு, பாசத்துடன்.. உங்கள் வெங்கட் பிரபு” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.