“திரிவேணி சங்கம நீரை ஒரு கிளாஸ் குடித்துக் காட்டுங்கள்” – யோகி ஆதித்யநாத்திற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சவால்!

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளா திரிவேணி சங்கம கங்கை நீர்,குடிப்பதற்கு ஏற்பதல்ல என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூறிய நிலையில்….

உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்வில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிலையில், பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ஃபீக்கல் கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகளால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதிலளித்துள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல, குடிப்பதற்கும் ஏற்றதுதான். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், பொது இடத்தில் யோகி ஆதித்யநாத் திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீரை குடிக்க தயாரா? அவரும் அவருடைய அமைச்சர்களும் மக்கள் முன்னிலையில் அந்த தண்ணீரை குடித்து காட்ட வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் சவால் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.