எம்.பி.யான இசையமைப்பாளருக்கு குவியும் பாராட்டு

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர், மாநிலங்களவை…

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர், மாநிலங்களவை எம்.பி.க்களாக குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, ராஜ்யபசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய கேரளாவைச் சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷாவும், ஆந்திராவைச் சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் மகத்தான இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ விருதையும் பெற்றார். இப்படியான பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இளையராஜா, மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இசைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனால், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட ‘இசைஞானி’, மாநிலங்களவை உறுப்பினராக சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

 

இளையராஜாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதே போன்று, நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜாவை கவுரவிக்க ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம் என்றாலும், மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும், இளையராஜா ஒரு Musical paradise என்பதால், அவர் இதற்கு முன்பு இருந்தே MP தான் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்கிற பெருமதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட செய்தியறிந்து மகிழ்வுற்றேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.

 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் இளையராஜா என்றும், பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களை இசையால் வென்ற இளையராஜா இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பல்வேறு தரப்பினரும் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.