போப் லியோவுக்கு விரைவில் நுரையீரல் அறுவை சிகிச்சை!

நுரையீரலில் ஆரம்பக்கட்டத்திலேயே சிறிய கட்டி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் போப் லியோ XIV ஒப்புதல் அளித்துள்ளார்.

ரோமில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நேற்று (அக். 11) நடைபெற்ற வாராந்திர பிரார்த்தனையின்போது, தனது நுரையீரலில் சிறிய கட்டி கண்டறியப்பட்டுள்ளதாக போப் லியோ XIV பொதுமக்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது நுரையீரலில் ஆரம்பக்கட்டத்திலேயே, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அமைந்துள்ள சிறிய கட்டியை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்” என்றார். மேலும், மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொள்வது சரியானதாக இருக்கும் எனக் கருதுவதாகவும், அதற்கு தான் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மறைந்த போப் பிரான்சிஸுக்குப் பிறகு, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு போப் பொறுப்பேற்ற லியோவுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களில் அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டுள்ளதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு போப் குணமடைய சுமார் ஒரு வாரம் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாடிகனின் அதிகாரப்பூர்வ செய்தித் தளமான வாடிகன் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. போப் லியோவின் உடல்நிலை குறித்து இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது தனிப்பட்ட ஆதரவைத் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் அவர் எதிர்கொள்ளவிருக்கும் மருத்துவச் சவால்கள் எளிதாக அமைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவும், போப் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைந்து மீண்டும் உடல்நலத்துடன் திரும்ப வேண்டும் என வாழ்த்தினார். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகும் போப் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.

ராபர்ட் பிரான்சிஸ் பிரெவோஸ்ட் என்பது போப் லியோ XIV-ன் இயற்பெயர். புனித பேதுருவின் திருச்சபைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள 267-வது நபரான இவர், அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் ஆவார். இதற்கிடையே, நவம்பர் மாதம் உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என போப் லியோ பிரார்த்தனையின்போது உறுதிப்படுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.