நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு எதிரொலியாக விகடன் குழுமம் பெண் ஊழியர்களுக்கான மாதவிடாய் விடுப்பை அறிவித்துள்ளது.
நியூஸ் 7 தமிழ் கடந்த மார்ச் 2022ம் ஆண்டு மகளிர் தினத்தையொட்டி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பை வழங்கியது. அதேபோல் இந்த ஆண்டு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்தியது. இதையடுத்து சில கல்வி நிறுவனங்கள் தங்களின் கல்லூரிகளில் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய்க்கு விடுப்பு அளித்தது.
இந்நிலையில், விகடன் குழுமமும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய்க்கு விடுப்பு அளித்து அறிவித்துள்ளது. அதன்படி, வருடத்தில் 12 நாட்கள் விடுமுறை எனவும், இதற்காக அனுமதி கேட்க வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.







