புத்தர் பிறந்த தினமான இன்று, நேபாளத்தில் உள்ள புத்தர் பிறந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்.
நேபாள பிரதமர் ஷெர் பஹதுர் தியுபாவின் அழைப்பின் பேரில் ஒருநாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, நேபாளம் சென்றார்.
புத்தர் பிறந்த லும்பினி நகருக்கு வருகை தந்த அவரை, நேபாள பிரதமர் ஷெர் பஹதுர் தியுபாவும், அவரது மனைவி அர்சு ராணா தியுபாவும் நேரில் வரவேற்றனர்.
நேபாள பிரதமருடன், லும்பினி நகரில் உள்ள புனித மகாமாயாதேவி ஆலயத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வழிபாடு மேற்கொண்டார்.
இதையடுத்து, ஆலயத்தை ஒட்டி உள்ள அசோக தூண் அருகே இந்திய பிரதமரும் நேபாள பிரதமரும் தீபம் ஏற்றினர். இந்த தூண் அசோக சக்கரவர்த்தியால் கி.மு. 249ல் நிர்மாணிக்கப்பட்டது. புத்தர் பிறந்த இடம் இதுதான் என்பதற்கு இந்த தூண்தான் வரலாற்றுச் சான்றாக இருந்து வருகிறது.
இதையடுத்து, அங்கு நேபாள பிரதமரின் குடும்பத்தினருடன் சேர்ந்து மோடி பூஜையில் ஈடுபட்டார். புத்தமத வழக்கப்படி இந்த பூஜை நடத்தப்பட்டது.
இதன் பின்னர், லும்பினி நகரில் அமைய உள்ள புத்தமத கலாச்சார மற்றும் பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மையத்தை டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச புத்தமத கூட்டமைப்பு நிர்மாணிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.










