ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இந்தோனோசியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. புவி வெப்பமடைதல், தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள தலைவர்களுக்கு இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ விருந்து ஒன்றை அளித்தார். அறுசுவை விருந்துகளும் கலை நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வில் இடம் பெற்றிருந்தன.
இந்த விருந்தில் பங்கேற்க வந்திருந்தபோது பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் எதிர் எதிரே சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிரித்துக்கொண்டபடியே சிறிது நேரம் இருவரும் பேசினர்.
கடந்த 2020ம் ஆண்டு லடாக்கில் உள்ள கள்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறியதால் ஏற்பட்ட மோதலையடுத்து, இந்தியா சீனா இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்தது. இந்நிலையில் அந்த சம்பவத்திற்கு பின்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் நேருக்கு நேர் சந்தித்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்ளும் நிகழ்வு தற்போதுதான் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.







