பிரதமராக பதவி ஏற்ற கடந்த 8 ஆண்டுகளில் மக்கள் தலைக்குனியும்படி தான் எதையும் செய்யவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் மருத்துவமனையை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, கடந்த 8 ஆண்டுகளில் தனது அரசு நாட்டுக்காக மிகச் சிறப்பான பணிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டார். மக்களின் முயற்சியும் அரசின் முயற்சியும் ஒன்றுசேரும்போது புது வலிமை கிடைப்பதாகவும், அது மக்கள் நலம்பெற உதவுவதாகவும் அவர் கூறினார்.
ஏழைகள், பட்டியல் சமூகத்தவர்கள், பெண்கள் ஆகியோர் அதிகாரம் பெற வேண்டும், மக்களின் வாழ்க்கை முறை தூய்மை நிறைந்ததாகவும் சுகாதாரமிக்கதாகவும் இருக்க வேண்டும், நாட்டின் பொருளாதாரம் தற்சார்பு கொண்டதாக இருக்க வேண்டும் என மகாத்மா காந்தியும் சர்தார் வல்லபாய் படேலும் கனவு கண்டதாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்த கனவுகளை நனவாக்க கடந்த 8 ஆண்டுகளில் தனது அரசு நேர்மையுடன் பணியாற்றி இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளில் மக்கள் வெட்கித்தலைக்குனியும்படி தான் எதையும் செய்யவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.









