“பிரதமர் மோடி அரசு இந்தியாவின் மொழியாக இந்தியை கொண்டாட விரும்புகிறது” – #DMK மாணவரணி செயலாளர் எழிலரசன் பேட்டி!

பிரதமர் மோடி அரசு இந்தியை இந்தியாவின் மொழியாக கொண்டாட விரும்புவதாக திமுக மாணவரணியின் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ இன் பொன் விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின்…

பிரதமர் மோடி அரசு இந்தியை இந்தியாவின் மொழியாக கொண்டாட விரும்புவதாக திமுக மாணவரணியின் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ இன் பொன் விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தார். இந்தி மாத கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகம் முன்பு திமுகவின் மாணவரணியினர் அதன் தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் திரண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாணவரணியின் செயலாளர் எழிலரசன் கூறியதாவது,

“எந்தவொரு மொழிக்கும் தேசிய மொழி என்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்த சூழலில், பிரதமர் மோடி அரசு இந்தியை மட்டுமே இந்தியாவின் மொழியாக கொண்டாட விரும்புகிறது. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முற்படுகின்றனர். இந்த விழாவை இந்தியை மாநில மொழியாக கொண்டிருக்கும் மாநிலத்தில் நடத்தி இருக்கலாம். இந்தியை எல்லா வகையிலும் திணிக்க முயற்சி செய்யும் பிரதமர் மோடி அரசை ஒவ்வொரு காலகட்டத்திலும் திமுகவும், தமிழ்நாட்டு மக்களும், அறிஞர்களும் போராடி எதிர்த்து வருகின்றனர். இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்ற பிம்பத்தை மோடி அரசு வெளிப்படுத்துகிறது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, மொழி உரிமைக்கு எதிரானது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.”

இவ்வாறு திமுக மாணவரணியின் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.